தோழர் பி.ஆர்.சி அவர்களுக்கு நினைவஞ்சலி
1969_72 காலகட்டத்தில் நான் தேசீயக் கல்லூரி மாணவன்.பி.காம் படித்து வந்தேன்.அப்போது பொன்னகரில் எனது அறைக்குப் பக்கத்து அறையில் புதுக்கோட்டையைச் சேர்ந்த பொன்னையன் (எம்.ஏ.மாணவர்) தங்கியிருந்தார்.எனது பள்ளிப் பருவத்திலேயே கம்யூனிஸ்ட் இயக்கம் பற்றி ஓரளவு அறிந்தவன் என்ற முறையில் எனது அறை நண்பர்களுடன் ஒரு நாள் நடப்பு அரசியல் பற்றி விவாதித்து வந்தேன்.அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பாராளுமன்ற கொறடாவாக விளங்கிய தோழர் ஜோதிர் மாய் பாசு அவர்கள் தனது வாதத் திறமையினால் மிகவும் புகழ் பெற்று விளங்கிய நேரம்.அவரும் சோஷலிஸ்ட் கட்சி தலைவர் மது லிமயேவும் சபை விவாதங்களில் கலந்து பாராளுமன்றத்தையே கலக்கி வந்தனர்.அது பற்றி ஒரு நண்பருடன் கூறினேன்.அந்த நண்பர் பொன்னையன் அவர்களிடத்தில் சென்று " எனது அறையில் ஒரு மாணவர் பாராளுமன்ற நடவடிக்கைகள் பற்றிய நிறைய விவரங்களைக் கூறுகிறார்.அவரை உங்கள் சங்கத்தில் இணைத்துக் கொள்ளுங்கள் " என்றார்.அதனைக் கேட்ட பொன்னையன் என்னிடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாணவர் அணியான SFI இல் இணைந்தது கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.அப்போது CPI சார்பில் AISF என்ற மாணவர் அமைப்பு ஒன்று உள்ளது என்பதையெல்லாம் நான் அறியேன்.கூடிய விரைவில் SFI இல் இணைந்தது பணியாற்றத் தொடங்கினேன்.ஒரு சமயம் பொன்னையன் சிங்காரத் தோப்பிலுள்ள சிபிஎம் அலுவலகத்துக்கு என்னை அழைத்துச் சென்றார்.அங்கே ஒரு 45_50 வயது மதிக்கத்தக்க ஒரு தலைவரிடம் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார்.அப்போது அவர்"இந்த தோழர் நிறைய பத்திரிகைகள் படிக்கக்கூடியவர்.SFI இன் முன்னணி ஊழியர் " என்று அறிமுகம் செய்து வைத்தார்.பிற்பாடு அவர்தான் சிபிஎம் கட்சியின் மாவட்டச் செயலாளர் பி.ராமச்சந்திரன் என்று அறிந்து கொண்டேன்.தோழர் பொன்னையன் எம்.ஏ.இறுதித் தேர்வு எழுத வேண்டியிருந்ததால் SFI பணிகளை என்னிடத்தில் ஒப்படைத்தார்.காலப் போக்கில் நான் திருச்சி மாவட்ட SFI செயலாளர் ஆகத் தேர்வானேன்.அதன் பின்னர் அடிக்கடி CPM அலுவலகம் சென்று தோழர் பி.ராமச்சந்திரன் ,நகரச் செயலாளராக இருந்த தோழர் கே.வரதராஜன்,கே.அனந்தன்நம்பியார்,ஆர்.உமாநாத் ,வி.பரமேஸ்வரன்,பாப்பா போன்றவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. விடுமுறை நாட்களில் குறிப்பாக தோழர் பி.ஆர்.சி அவர்களுடன் அளவளாவுவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன்.மார்க்சிய தத்துவம் மற்றும் கட்சி அமைப்பு பற்றி நான் கேட்கும் கேள்விகளுக்கு சளைக்காமல் பதிலிறுப்பார் தோழர் பிஆர்பி. 1975 இறுதியில் அரசுப் பணியில் சேர்ந்தேன் காரணமாக அவரைச் சந்திக்க அதன்பிறகு வாய்ப்பு கிடைக்கவில்லை.நான் நேரில் அவரைப் பற்றி அறிந்ததை விட தோழர் என்.ராமகிருஷ்ணன் பிஆர்பி வாழ்க்கை வரலாறு பற்றி எழுதிய நூலின் வழியாவே அதிகம் நான் அறிந்து கொண்டேன்.மார்க்சியம் பற்றிய ஓரளவு எனது அறிதலுக்கு காரணகர்த்தாவாக விளங்கிய தோழர் பி.ஆர்.சி.அவர்களுக்கு அவரது நினைவு நாளில் எனது அஞ்சலியை உரித்தாக்கிக்கொள்கிறேன்.
Comments
Post a Comment